×

அமலாக்கத்துறையின் கஸ்டடியில் உள்ள கெஜ்ரிவால், கே.கவிதாவை ஒரே இடத்தில் வைத்து விசாரிக்க ‘ஈடி’ முடிவு..? பஞ்சாப் முதல்வர் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்

புதுடெல்லி: அமலாக்கத்துறை கஸ்டடியில் உள்ள கெஜ்ரிவால், கே.கவிதா ஆகிய இருவரையும், ஒரே இடத்தில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ெடல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது அமலாக்கத்துறை கஸ்டடியில் வரும் வியாழக் கிழமை வரையும் விசாரிக்கப்பட உள்ளார். இதே வழக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட பிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவின் மகளும், எம்எல்சியுமான கே.கவிதா, வரும் செவ்வாய்கிழமை வரை அமலாக்கத்துறை கஸ்டடியில் விசாரிக்கப்பட்டு வருகிறார். மேற்கண்ட வழக்கில் இருவரையும் ஒரே இடத்தில் வைத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘அமலாக்கத்துறை கஸ்டடியில் உள்ள அரவிந்த் ெகஜ்ரிவால், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. கைது மற்றும் காவலுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ள கெஜ்ரிவாலின் மனு, புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது’ என்றன. இதற்கிடையே பஞ்சாப் மாநில மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக, ஆம்ஆத்மி கட்சியின் முதல்வர் பகவந்த் மான் மீது வழக்குபதிந்து அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்தது. இதுகுறித்து பஞ்சாப் மாநில பாஜக தலைவர் சுனில் ஜாகர் கூறுகையில், ‘அமலாக்கத்துறை விசாரணை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பஞ்சாப் அரசின் மதுபானக் கொள்கை முடிவால், அரசின் கருவூலத்துக்கு ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார். டெல்லி அரசின் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. அதற்காக சிபிஐ நீதிமன்றத்தை சிபிஐ அதிகாரிகள் அணுகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைக்குள் முதல்வர் பணி?
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் இருந்தே தனது அலுவல் பணியை மேற்கொள்வார் என்று ஆம்ஆத்மி தலைவர்கள் கூறி வரும் நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அளித்த பேட்டியில், ‘சிறையில் இருந்து கொண்டே டெல்லி அரசை வழிநடத்த முடியாது என்று எங்கும் எழுதப்படவில்லை. நீதிமன்றத்தால் கெஜ்ரிவால் குற்றவாளி என்று அறிவிக்கும் வரை, அவர் சிறையில் இருந்து கொண்டே அவரது அலுவல் பணியைத் தொடர சட்டம் அனுமதி அளிக்கிறது. ஆம் ஆத்மி கட்சியில் கெஜ்ரிவாலுக்கு பதிலாக வேறு யாரும் முதல்வராக வாய்ப்பில்லை. எதிர்க்கட்சிகளை வேட்டையாட மத்திய அமைப்புகளை மோடி அரசு பயன்படுத்துகிறது. மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதை தடுக்க பாஜக முயற்சிக்கிறது’ என்றார்.

கெஜ்ரிவாலுக்கு ‘ஹைப்பர் கிளைசீமியா’
அமலாக்கத்துறை கஸ்டடியில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, ஹைப்பர் கிளைசீமியா (நீரிழிவு) பாதிப்பு உள்ளது. அதனால் அவருக்கு தேவையான மருந்துகளை வழங்குமாறு அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, 6 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் உள்ள கெஜ்ரிவாலுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட வேண்டும். அவருக்கு தேவையான உணவை அமலாக்கத்துறையால் வழங்க முடியாவிட்டால், வீட்டு உதவியாளரை அனுமதிக்க வேண்டும். மேலும், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா மற்றும் தனிச் செயலாளர் பிபவ் குமார் ஆகியோரை மாலை 6 முதல் 7 மணி வரை பார்வையிட அனுமதிக்க வேண்டும். இந்த காலகட்டத்தில், அவரது வழக்கறிஞர்கள் முகமது இர்ஷாத் மற்றும் விவேக் ஜெயின் ஆகியோரின் சந்திப்புக்கும் அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

The post அமலாக்கத்துறையின் கஸ்டடியில் உள்ள கெஜ்ரிவால், கே.கவிதாவை ஒரே இடத்தில் வைத்து விசாரிக்க ‘ஈடி’ முடிவு..? பஞ்சாப் முதல்வர் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் appeared first on Dinakaran.

Tags : Kejriwal, K. ,Enforcement Department ,ED ,Election Commission ,Chief Minister of ,Punjab ,New Delhi ,Kejriwal ,K. ,Kavita ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Delhi government ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி...